Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, June 19, 2006

தமிழ் நண்டு கதை

ஒரு கூஜாவுக்குள்ளே நெறய்ய்ய்ய்ய நண்டு இருந்துச்சாம். இங்கிலீஷ் நண்டு, ஹிந்தி நண்டு, தமிழ் நண்டு எல்லாம் இருந்துச்சாம். அந்த கூஜாவை யாரோ தொறந்து வெச்சாங்களாம்..என்ன.. மொதல்ல ஒவ்வொண்ணா இங்கிலீஷ் நண்டுங்க எல்லாம் வெளிய வந்துச்சாம்.. அப்புறம் கொஞ்சநேரங்கழிச்சு ஹிந்தி நண்டுங்ககூட வெளிய வந்துச்சாம். ஆனா ரொம்பநேஏஏஏஏரம் ஆகியும் தமிழ் நண்டுங்க மட்டும் வெளிய வர்ர்ரவே இல்லையாம்.. உள்ளார பாத்தா... ஒரு நண்டு ஏறினா இன்னொன்னு புடுச்சி கீழே இழுக்குதாம்.. இன்னொன்னு ஏறினா வேற ஒண்ணு கீழே இழுக்குதாம்.. இப்படியேஏஏஏ ஒண்ணை இன்னொன்னு வெளிய வரமுடியாம செஞ்சுட்டிருந்துச்சாம். அவ்ளோதான் கதை.

(ரிதம் படத்தில் மணிவண்ணன் அர்ஜூனுக்கு இந்த கதையை சொல்லுவார். நீங்க இதையும் காசி தமிழ்மணத்தை விக்கறதா அறிவிச்சிருக்கறதையும் இணைச்சுப்பாத்தீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை. உங்களை யாரு அவ்ளோவெல்லாம் யோசிக்கச் சொன்னது?)

Saturday, June 17, 2006

மட்டுறுத்தல் நண்பன் பற்றிய சந்தேகத்துக்கான விளக்கம்

நண்பர் மகேந்திரன் அவர்களின் இந்த பதிவில் நான் இட்ட விளக்கத்தை இங்கு அனைவரும் அறியும்படி அளிக்கிறேன். இந்தமாதிரி சந்தேகங்கள் உங்களில் யார் மனதில் இருந்தாலும் அதைப்போக்க இது உதவும்.

மகேந்திரன்,

உங்கள் பதிவில் டுபாக்கூர் என்பவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் 'மட்டுறுத்தல் நண்பன்' செயலியைப்பற்றி சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அதற்கு பதில் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்த மடல்.

என்மேல் நம்பிக்கை இல்லாவிட்டால், தேன்கூடு, தமிழ்மணம் இரண்டு திரட்டிகளிலும் எனது மென்பொருளுக்கு சுட்டி கொடுத்திருப்பார்களா என்று யோசித்துப்பாருங்கள். நான் 'மட்டுறுத்தல் நண்பனை' விளக்கிய இந்த பதிவில் சிகப்பு கலரில் நன்றாக தெரியும்படி என்ன சொல்லியிருக்கிறேன் என்று பாருங்கள்.

"ஒரு புது ஜிமெயில் கணக்கை உருவாக்கி அதை பின்னூட்டங்களுக்காக மட்டும் என்று ஒதுக்கிவிடுங்கள்...ஏற்கனவே மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கை இந்த செயலியுடன் பயன்படுத்தவேண்டாம்."

அதாவது நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் ஜிமெயில் முகவரியில் பின்னூட்டங்களைத்தவிர வேறெதுவும் இருக்காது. அதை வைத்துக்கொண்டு என்னால் யாரையும் எதுவும் செய்யமுடியாது. அதிலும் அவர் சொல்லும்படி உங்கள் ப்ளாக்கர் கணக்கை எல்லாம் தொடக்கூடிய முடியாது என்பது சின்னக்குழந்தைக்கு கூட புரியும். நீங்கள் ப்ளாக்கர் கணக்குக்கு பயன்படுத்தும் அதே கடவுச்சொல்லையே இதற்கும் பயன்படுத்தக்கூடாது என்பதை நான் சொல்லித்தரத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அது வலையுலாவுதலில் முதல் பாடம்.
நீங்கள் தரும் கடவுச்சொல் உங்கள் பின்னூட்டங்களைப்பார்த்து ஆலோசனைகள் அளிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அன்னியலோகத்தில் எங்கும் சேமிக்கப்படுவதில்லை. தேன்கூட்டில் எவ்வாறு ஒரு கடவுச்சொல் அளித்து நுழைகிறீர்களோ அது போலத்தான்.

கூகிளில் "Ramani Arunachalam AID" என்று தேடிப்பாருங்கள். முதலில் தோன்றும் இந்த இரண்டு சுட்டிகளுக்கு சென்று பார்த்தால் 'Association for India's Development (AID)' என்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபடும் லாபத்துக்கல்லாத அமைப்பில் நான் செகரடரியாகவும் பின்னர் பிரசிடென்டாகவும் பணியாற்றியது உங்களுக்கு தெரியவரும்.
இவற்றைப் பார்த்தபின் நான் எத்தகையவன் என்று நீங்களே முடிவுசெய்து கொள்ளலாம்.

அன்புடன்
வெங்கட்ரமணி

Wednesday, June 14, 2006

ரசிக்கக்கூடிய ஆறு (விளையாட்டு)

'ஆறு மனமே ஆறு.. அந்த பொன்ஸின் கட்டளை ஆறு'னு என்னை இந்த ஆறு விஷய விளையாட்டுக்கு இழுத்த எங்கள் ஆற்றலரசி, ஆனைவிரும்பி அவங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். 'திருவிளையாடல்' படத்துல சிம்மக்குரலோன் சிவாஜி ஔவைப்பாட்டியிடம் 'ஒன்று, இரண்டு, மூன்று என்று என்னை வரிசைப்படுத்தி பாடு'னு சொல்வார். அந்தமாதிரி ஒன்று, இரண்டு, மூன்றுனு வரிசைப்படுத்தி எழுதிட்டாங்க பொன்ஸ்.. நானும் அதேமாதிரி எழுதறேன்.

ஒன்று இல்லாவிட்டால் நான் தவித்துப்போவேன் - அது இணையம். கடைசியா வீட்டை மாத்தினப்போதான் இதை புரிஞ்சுக்கிட்டேன். இணையதொடர்பு கிடைக்காத அந்த நாலுநாள் ஏதோ உலகமே இருண்டுட்ட மாதிரி நினைப்பு.. பொறந்ததுல இருந்தே ஜிமெயில் பயன்படுத்துனமாதிரி அதை பார்க்கமுடியாம கை சும்மா இருக்கமுடியலை.

இரண்டு நிகழ்ச்சிகள் -
1. 12 வருசம் ஆம்பிளைப்பசங்க மட்டும் படிக்கற ஸ்கூல்ல படிச்சுட்டு கோ-எட் காலேஜ்ல சேர்ந்த முதல் வருஷம் அது. பொண்ணுங்களோட சகஜமா பேசினதே கிடையாது. புத்தகங்கள் வாங்கற கோ-ஆப் ஸ்டோர்ல இருக்கும்போது ஒரு பொண்ணு சாக்லேட் டப்பா காண்பிச்சி 'பர்த்டே'னு சொல்லி எடுத்துக்க சொன்னா.. நமக்கா இங்கே வயத்துக்குள்ள பூச்சிகள் ஊருது. எதாவது பேசணுமே.. என்ன பேசறதுனு வேற தோண மாட்டேங்குது. கடைசியா ஒருவழியா பேசியாச்சு.. ஆனா நான் கேட்ட கேள்வியை நாலு வருஷம் கழிச்சு, ஏன் இப்பகூட அந்த நல்ல நண்பி மறந்துருக்க மாட்டான்னு நினைக்கிறேன். நான் கேட்டது... 'யாருக்கு பர்த்டே?'!! ஏண்டா, மத்தவங்க பர்த்டேக்கு நான் சாக்லேட் கொடுப்பேனானு அவ நினைச்சு நினைச்சு சிரிச்சிருப்பா..
2. யூ.எஸ் வந்த புதுசில் கார் இல்லாமல் டிரெயினில் பயணம் செய்தபோது தவறுதலாய் இறங்கவேண்டிய ஸ்டேஷனுக்கு முந்தையு ஸ்டேஷனிலேயே இறங்கி, அட ஒரு ஸ்டேஷன்தானேன்னு ட்ரெயின் ட்ரேக்கை தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சு ஒருமணிநேரம் நடந்தது. இதுல ஆளில்லா வீதியில் நடக்கும்போது எங்கே எவனாவது திருடன் பிடிச்சுக்கப்போறானோன்னு பயம்வேற!!

என் மனதுக்கு நெருக்கமான மூன்று விஷயங்கள்
1. மென்பொருள் - கடந்த ஒரு மாசத்துல நான் செஞ்சது எல்லாம் பார்த்திருப்பீங்க. மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
2. தமிழில் எழுதுவது - சின்ன வயசுல கையெழுத்து பத்திரிகை தொடங்கி கிறுக்கினதுல ஆரம்பிச்சது (பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு சரித்திர நாவல் எல்லாம் முயற்சி பண்ணி அதை என்னைத்தவிர இன்னொருத்தனையும் படிக்க வெச்சேன் தெரியுமா?). நடுவுல கம்ப்யூட்டர் வந்து இந்த ஆர்வத்தை கபளீகரம் பண்ணிடுச்சு. மறுபடி இணையத்துல தமிழை பாத்ததும் எழுதனும்னு தோணி எப்பவாவது ஒருதரம் எழுதிட்டிருக்கேன்.
3. இந்தியா - மறுபடி சின்ன வயசுல ஸ்கூல்ல "india is my country. all indians are my brothers and sisters"னு வாராவாரம் pledge சொன்னதாலோ என்னவோ, ஜாதி, மத அடையாளங்களைவிட இந்தியன்கிற அடையாளம்தான் முக்கியமா படுது. என்னால முடிஞ்ச உதவிகளை நாலு வருஷம் ஒரு லாபத்துக்கல்லாத இயக்கம் மூலமா செஞ்சிருக்கிற திருப்தி இருக்கு.

மறக்கமுடியாத நான்கு திரை கதாபாத்திரங்கள்
1. காமேஷ்வரன் - படம் 'மைக்கேல் மதன காம ராஜன்'. கமலோட அற்புதமான நடிப்பு மற்ற கதாபாத்திரங்கள்ல வெளிப்பட்டிருந்தாலும் இதுல அவரோட பாஷையும் முகபாவனைகளும் ரொம்பவே ரசிக்கும்படியா இருந்தது. 'நேக்கா.. நோக்கா.. நேக்கும் நோக்குமா' ;))))
2. ரமணாவில் விஜய்காந்த் - எனக்கு அவரது மிடுக்கான நடிப்பும் கோபம் மற்றும் சோக காட்சிகளில் காட்டும் தத்ரூபமும் மிகவும் பிடிக்கும். அதுக்காக அவரோட கட்சிக்கு எல்லாம் சப்போர்ட் கிடையாது (இதுவரை).
3. Tom hanks - நடிப்புக்கு இலக்கணம். எந்த கதாபாத்திரத்தில் நுழைகிறாரோ அதாகவே மாறிவிடும் ஹாலிவுட் கமல்! Cast Away படத்தில் அவரோடு சேர்ந்து நாமும் அந்த தீவில் போராடி சோகத்தில் ஆழ்ந்து வெளிவருமாறு செய்திருப்பார். சமீபத்தில் 'The Terminal' பார்த்தேன். அச்சு அசல் ஒரு ஐரோப்பியரைப்போல உடைந்த ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியிருந்தார்.
4. Aamir khan - நிரந்தர காலேஜ் மாணவர் ;) ஆனால் நாற்பது வயதானாலும் குறும்புத்தனமான நடிப்பைக்காட்டி நம் வயதையும் சேர்த்து குறைப்பவர். Dil Chahta Hai பார்த்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்.

எங்கோ இழுத்துச்செல்லும் ஐந்து பாடல்கள்
1. வெள்ளைப்புறா ஒன்று - ஸ்கூல் விடுமுறையின்போது விழுப்புரத்தில் ரோஸ்மில்க் குடித்துக்கொண்டே கேட்டது
2. காதல் ரோஜாவே - +2வில் இந்தப்பாட்டையும் விளங்காத பிஸிக்ஸையும் இணைந்து படித்தது
3. டேக் இட் ஈஸி ஊர்வசி - காலேஜ் ஹாஸ்டலில் ஓட்டை டேப் ரிக்கார்டில் இந்தப்பாட்டை தேயும்வரை போட்டு ரகளை செய்தது
4. கோயீ லட்கீ ஹே - பெங்களூரில் ஷாரூக்கான் பைத்தியமான நண்பி இந்தப்படத்தில் உருகுவதை பார்த்து கிண்டலடித்தது
5. கண்ணாமூச்சி ஏனடா - யூ.எஸ் வந்த புதுசில் தமிழ்ப்படமே பார்க்கமுடியாமல் காய்ந்து, முதல் முதலில் நம்ம ஐஸ் படத்தை பார்த்து குளிர்ந்தது.

நான் கவுக்கப்போகும் ஆறு வலைநண்பர்கள்
1. டுபுக்கு - மற்றவரை கிண்டல் செய்யாமல் சிரித்து ரசிக்கவைக்கும்படி எழுதும் சொல்லின் செல்வர்
2. தளபதி சிபி - கச்சிதமா எழுதினாலும் நச்னு எழுதறவர்
3. செல்வன் - கடவுளுக்கே புது விளக்கம் சொன்ன பல்துறை வல்லுநர்
4. உஷா - மனசுல படறதை அப்படியே வார்த்தைகளில் வெளிப்படுத்தும் அருமை எழுத்தாளர்
5. குமரன் - கோளறுபதிகமும் அலசுவார், நேத்து வந்த பாட்டையும் அலசுவார் குமரன்
6. சுகா - பென்சிலை வைத்து சிலைவடிக்கும் ஓவியர் மற்றும் கவிஞர்

அப்பாடா.. சொன்னபடியே ரசத்தோட (சாம்பார், கறியோடயும்) எழுதியாச்சு. எப்படி இருக்குனு படிச்சுப்பாத்து சொல்லுங்க. அப்புறம், 'ஆறு'னு புது குறிச்சொல் உருவாக்கியிருக்கேன். இனிமேல இந்த ஆறு விளையாட்டு விளையாடறவங்க எல்லாரும் தமிழ்மணத்துல் இடுகையை சேர்க்கும்போது அந்த குறிச்சொல்லை தேர்ந்தெடுத்தீங்கன்னா எல்லாரோட 'ஆறு'களையும் சுலபமா ஒரே இடத்துல பார்க்கமுடியும். செய்றீங்களா?

Monday, June 05, 2006

One-click Notification பயனர் கையேடு தயார்

One-click Notification சேவையை பயன்படுத்த நீங்கள் டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய மாற்றங்களை விளக்கி ஒரு பயனர் கையேடு தயாரித்துள்ளேன். இனி, நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்களே இதைப்படித்து மாற்றங்களை செய்யலாம். செல்வன், குமரன், பிரசன்னா, சீனு, மாயவரத்தான், பொன்ஸ் ஆகியோர் இதை பயன்படுத்துகிறார்கள்/விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

தேன்கூடு வலைவாசலில் இடதுபக்கத்தில் 'அந்நியலோகம்' என்ற பகுதியில் எனது மூன்று மென்பொருட்களுக்கும் சுட்டி கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய முயற்சிகளை உடனுக்குடன் ஆதரிக்கும் அவர்களது வலைவாசல் பாராட்டுக்குறியது. தமிழ்மணம் சில வகைகளில் சிறப்பாக இருக்கிறது என்றால் தேன்கூடு வேறு சில வகைகளில் தமிழ் வலைப்பதிவுலகுக்கு பயனளிக்கிறது. நான் கவனித்த சில -
1. நீங்கள் படிக்கவிரும்பாத பதிவுகளை மறைக்கும் வசதி
2. அதிகம் பார்வையிடப்பட்டவை பகுதி
3. தமிழ் அகராதி பகுதி
4. மாதாந்திர போட்டி

இத்துடன் இந்த வலைபரப்பு முடிவடைகிறது. மீண்டும் அடுத்த வலைபரப்பு...எப்போதென்று தெரியவில்லை. அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் L.R. நாராயணன்... சே.. வெங்கட்ரமணி.

Thursday, June 01, 2006

பின்னூட்ட டென்னிஸ் கோர்ட்

ஒரு டென்னிஸ் கோர்ட்டை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு டென்னிஸ் வீரர் (பிடிக்கலையா.. சரி, வீராங்கனை.. அட, சானியாவென்றே வைத்துக்கொள்ளுங்கள்) சர்வீஸ் போடுகிறார். அதை எதிர்ப்புறத்தில் இருப்பவர் பெற்று பந்தை திருப்பி அனுப்புகிறார். சர்வீஸ் போட்டவர் அதை எதிர்கொண்டபின் பந்து காணாமல் போய்விடுகிறது. இந்தமாதிரி ஆட்டம் சுவாரசியமாக இருக்குமா? தொடர்ச்சியாக இருபுறமும் கொஞ்சநேரம் பந்தை எதிர்கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? இந்தமாதிரிதான் பந்து காணாமல் போகிறது நம் வலைப்பதிவுகளில். என்னய்யா கொழப்புறன்னு கேக்கறீங்களா? இருங்க சொல்றேன்.

நீங்கள் ஒரு பதிவை இடுகிறீர்கள். அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது, அதில் சில கேள்விகளோ விமர்சனங்களோ இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். இப்போது பந்து உங்கள் கோர்ட்டில். நீங்கள் அதற்கான பதிலை அளிக்கும்போது அது பின்னூட்டியவருக்கு நிச்சயமாக போய்ச் சேருகிறதா? 'வருகைக்கு நன்றி' என்பது போன்ற முக்கியமில்லாத பதிலாக இருந்தால் பரவாயில்லை. நீளமான பதிலை டைப் அடித்துவிட்டு அது தண்ணீரில் எழுதியதுபோல் கவனிக்கப்படாமல் போனால்..... இதுபற்றி நான் போனவருடமே(!) புலம்பியதை இங்கு காணலாம். ஆம், தமிழ்மணத்தின் 'மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதி இதில் உதவுகிறதுதான். ஆனால், அதை தொடர்ந்து கவனித்து, தான் பின்னூட்டிய பதிவு வருகிறதா என்று எத்தனைபேர் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்?

இதற்கு ஒரு யோசனை தோன்றியது. உங்கள் பதிலை வழங்கியபின் நீங்களே அதை சுலபமாக பின்னூட்டியவருக்கு அறிவிக்கமுடிந்தால் நன்றாக இருக்குமல்லவா? கொஞ்சநேரம் முயன்று ஒருசில டெம்ப்ளேட் மாற்றங்களை செய்து One-click Notification என்ற ஒரு வசதியை இந்த வலைப்பதிவில் செய்திருக்கிறேன். இதனால், நீங்கள் இடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கு கீழேயும் இவ்வாறு ஒரு பொத்தான் தோன்றும் (எனக்கு மட்டும்).


அதை சொடுக்கினால் பின்னூட்டியவரின் profileல் இருந்து மின்னஞ்சலை பெற்று (மின்னஞ்சல் இருந்தால்) அதற்கு கீழ்க்கண்டவாறு ஒரு auto-generated message அனுப்பப்படும்.

Subject: Response to your comment has been posted
Message: Venkataramani has responded to your comment on டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள். Please click this link to see the response.

இந்த மின்னஞ்சலில் அவர் பின்னூட்டிய இடுகையின் தலைப்பும் சுட்டியும் இருப்பதால் சுலபமாக உங்கள் பக்கத்துக்கு வந்து உங்கள் பதிலை பார்க்கமுடியும். தமிழ்மணத்தின் 'மறுமொழியப்பட்ட இடுகைகள்' பகுதியை தொடர்ந்து கண்காணிப்பதைவிட இது சுலபம். எனது 'டாப் 10 வசனங்கள்' பற்றிய இடுகைக்கு பின்னூட்டியவர்கள் பலருக்கு இப்படி Notification வந்திருக்கும். இந்த வசதி உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உங்கள் வலைப்பதிவில் இதை பயன்படுத்த விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் (rarunach@gmail.com).