Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, September 27, 2004

மலரும் நினைவுகள் - 2 (பள்ளிக் குறும்புகள்)

சென்னைக்கு வந்தப்புறம் உன் எலிமென்டரி படிப்பெல்லாம் ஒரு கூரைவேய்ந்த பள்ளிக்கூடத்துல. மேரி மிஸ்னு ஒரு டீச்சர் ரொம்ப அன்பா பேசுவாங்க. பத்மா மிஸ்ங்கற டீச்சர கண்டா ஸ்கூலே பயப்படும். அந்த வயசுல ரொம்ப குறும்பெல்லாம் எதுவும் செஞ்சமாதிரி நினைவில்லை. நீயும் உன் அத்தை பையனும் இருக்கும் இடமே தெரியாதுன்னு எல்லாரும் சொல்வாங்களாம். ஆனா, ஐந்தாவது படிக்கும்போது செய்த ஒரு குறும்பு மட்டும் இன்னும் நினைவிருக்கு.

உனக்கு ஒரு நண்பன் இருந்தான். அன்னிக்கு அவன் உனக்கு முன் பெஞ்சுல உட்கார்ந்திருந்தான். என்ன தோணிச்சோ என்னவோ க்ளாஸ் நடக்கும்போதே அவன் shirt-ல முதுகுப்பக்கம் முட்டாள்-னு பென்சில் வெச்சு எழுதிட்டே. கவனமா அவனுக்கு தெரியாம தான் எழுதனும்னு பார்த்தே.. ஆனா அவன் கண்டுபிடிச்சிட்டான்.. 'மிஸ்.. இவன் என் முதுகுல என்னவோ எழுதிட்டான்'னு போட்டு குடுத்துட்டான். சுல்தான் டீச்சர் வந்து பாத்துட்டு என்ன செஞ்சாங்க ஞாபகம் இருக்கா.. வாழ்நாள் பூரா ஞாபகம் இருக்கற மாதிரியில்ல பண்ணிட்டாங்க... திக்கா பேனாவால முதுகுல FOOLனு நீ எழுதுனத விட பெரிசா எழுதிட்டாங்க.. வீட்டுக்கு போகும்போது ஒரு வீதி தான்னாலும் அதை யாரும் பாத்துடக்கூடாதுன்னு நீ ஓரமா ஒளிஞ்சு ஒளிஞ்சு போனபோது உனக்கு நீ செஞ்ச தப்பு நல்லா புரிஞ்சுடுச்சு.

நீ பொதுவா பார்த்தா ரொம்ப அமைதியான பையன்னே சொல்லுவாங்க.. ஆனா ஏழாவது படிக்கும்போது இது மாதிரி ஒருதடவை டோஸ் வாங்கினே.. அப்போ ஒவ்வொரு க்ளாஸ்க்கும் ஒரு லீடர் இருப்பான். அவன்தான் வாத்தியார் வராத நேரங்கள்ல வகுப்புல சத்தம் இல்லாம பார்த்துக்கனும். எப்போதும் கொஞ்சம் திடகாத்திரமான பையனா பார்த்துத்தான் லீடரா போடுவாங்க. ஆனா என்ன காரணமோ, நோஞ்சானா குரலே எடுக்காத உன்னைப்போய் லீடரா போட்டுட்டாங்க. உனக்கு உதவியா ஒரு குண்டுப்பையன் இருந்ததா ஞாபகம். ஒருநாள் ஒருமணி நேரத்துக்கு சார் வரலை. அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன். பசங்க சந்தோஷத்துக்கு கேக்கவா வேணும்.. காச்மூச்னு கத்திக்கிட்டிருந்தாங்க.. நீயும் கொஞ்சம் சாதாரணமா சொல்லிப்பாத்த.. 'கத்தாதீங்கடா'ன்னு.. கேப்பானுங்களா.. ம்ஹும்... உனக்கு வந்ததே ஒரு கோபம்... ஒரு கூச்சல் போட்டு அடக்கிடலாம்னு கத்தப்போய்.. பசங்க அடங்கிட்டாங்க... ஆனா உன் கூச்சலால இல்லை.. பக்கத்து க்ளாஸ் வாத்தியார் வந்ததால.. வேடிக்கை இதோட முடியல. அவர் உன்னை தனியா கூட்டிட்டு போய், ஏண்டா கூச்சல் போட்டே-ன்னு நாலு சாத்து முதுகுல சாத்துனாரு பாரு... அதுக்கப்புறம் நீ ஏன் க்ளாஸ் லீடர் ஆகப்போறே..

பாட்டி சொல்ற ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது - "தென்னை மரத்துல தேள் கொட்டினா பனைமரத்துல நெரி கட்டிச்சாம்."

Ctrl-Alt-கவிதை

வலைப்பதிவுகள்ல எக்கச்சக்க பேர் கவிதை எழுதறாங்க. நானும் முயற்சி பண்ணியிருக்கேன், கொஞ்சம் வித்தியாசமா. படிச்சுப்பாருங்க. Bug எல்லாம் கண்டுபிடிக்கக்கூடாது, ஆமாம் சொல்லிட்டேன்!!

while (bus_number != '12B')
i_am_waiting_at_busstand();
for (i = 0; i < 10000; i++)
i_check_time();
if (!you)
my_life = void;
my_sleep = sleep(0);
if (i_have_enough_courage && your_father != "policeman") {
goto your_house;
open("my_heart", O_RDWR);
}
printf("I Love You bus devadhai");

Tuesday, September 21, 2004

பெஞ்சை தேய்ப்பது எப்படி?

உங்கள்ல சிலபேர் சில நாள் பெஞ்சை தேய்ச்சிருப்பீங்க நிச்சயமா. அது எப்படி எனக்கு அது அவ்ளோ சுலபமா தெரியல. ஒரு வருஷமா தயார் பண்ணிட்டிருந்த பீட்ஸா பொட்டிய (எங்க சுவிட்சை அப்படித்தான் சொல்வாங்க) போனவாரம் ரீலீஸ் பண்ணியாச்சு. ஒரு நாளைக்கு பல Defectகளில் வேலை செய்துகொண்டிருந்த நான் திடீரென ஒருநாள் வேலையத்துப்போனேன். வேலை இல்லைன்னா வலைமேய்ஞ்சுட்டு சும்மா கிடக்கவேண்டியதுதானேன்னு நீங்க முறைக்கறது தெரியுது. ஆனா அதைத்தான் என்னால நிம்மதியா செய்யமுடியலை. வலைப்பதிவுகளை கொஞ்சநேரத்துக்குமேல் மேயமுடியல. நான் ரெகுலரா படிக்கற மத்த வலைத்தளங்களையும் ரசிக்கமுடியல. இன்னும் கொஞ்சநாள் பெஞ்சை தேய்ச்சாலும் வேலைக்கு உலை வராதுங்கற நம்பிக்கை இருக்கறதுனால அந்த பயமெல்லாம் இல்லை. ஆனாலும் மூளைக்கு தீனி பத்தலயோ என்னவோ... இந்தமாதிரி சமயத்துல நீங்க எப்படி பெஞ்சை தேய்ப்பீங்க??

Saturday, September 11, 2004

மலரும் நினைவுகள் - 1 (கவின்மிகு காஞ்சி)

நேற்றை மறந்துபோய் நாளையைப்பற்றிய கனவுகளோடு இன்றில் ஜக்கியமாகிவிட்டவனே.. நில்.. கேள்.. உன் அனுபவங்களை உனக்கு நினைவுபடுத்துகிறேன். உன் கதையை உனக்கே சொல்ல நான் யார் என்கிறாயா? நீயில்லாமல் நானில்லை.. நானில்லாமல் நீயில்லை... புரியலையா? நான் உன் மனசு. பழசை அசைபோடறது உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும். ஆனால் உன் வாழ்க்கையில் சுவாரசியமான விஷயங்கள் நிறைய கிடையாது என்பதால் ஒரு சில இடங்களையும் மனிதர்களையும் பற்றிய நினைவுகளை மட்டும் கிளருகிறேன்..

நீ பிறந்தது கல்வியிற்சிறந்த காஞ்சீபுரத்தில்.. உன் அம்மாவின் தாய்வீட்டில். அது ஒரு நீளமான வீடு. வீட்டின் எல்லா பாகங்களும் ஒன்றுக்கு அடுத்து ஒன்றாக ஏதோ க்யூவில் நிற்பதுபோல அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட நீளம். நுழைந்தவுடன் வலதுபக்கம் ஒரு அறை. அடுத்தது அழகான தூண்களுடன் முற்றம். மேலே கூரைவழியாக விழும் வெளிச்சம் கூரையிலுள்ள இரும்புக்கம்பிகளின் நிழலால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கும். முற்றத்தை சேர்ந்தாற்போல வாழும் அறை. அடுத்தது பெரிய சமையலறை. அதற்குப்பின் குளியலறை. அடுத்துவரும் தோட்டத்தை தாண்டி நடந்தால் கழிப்பறை. ராத்திரி அங்கு போகவேண்டியிருந்தால் கூட துணைக்கு அழைத்துப்போகவேண்டிய அளவுக்கு ஒதுங்கி இருட்டாக இருக்கும். (இப்போது நீ இருக்கும் வீட்டில் குளியலறை ஒரு தொட்டி. கழிப்பறை ஒரு சட்டி. இரண்டுக்கும் இடைவெளியே இல்லை.)



நீ பிறந்தவுடன் உனக்கு சிசுருஷை செய்ய உன் சித்திகள் மூன்று பேரும் பெரியம்மா ஒருத்தியும் போட்டி போட்டனர். பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லாததால் நீதான் முதல் குட்டிப்பையன். உனக்கு சாப்பாடு ஊட்ட உன் அம்மா பட்ட கஷ்டங்களை பிற்காலத்தில் சொன்னபோது லேசாக சிரிப்பு வந்தது. பல்லியைக்காட்டி பயமுறுத்து... தன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் பிச்சைக்காரனை பிள்ளை பிடிக்கிறவன் என்று காட்டி...என்னென்னவோ. மற்றபடி சின்னவயதில் எதுவும் குறும்பு செய்ததாக நினைவில்லை. புதுசாக யாரேனும் வந்தால் அம்மா பின்னாலேயே ஒளிந்துகொள்வாய். அப்புறம் ஏது குறும்பு.

கூடியவிரைவில் சென்னை வந்துவிட்டிருந்தாலும் விடுமுறையின் போதெல்லாம் காஞ்சீபுரத்துக்கு செல்வதென்றால் உனக்கு படு குஷி. அந்த முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நிறைய புத்தகங்கள் படித்தாய். அதில் ஒரு கதைமட்டும் ஏனோ நினைவிருக்கிறது. சிறுகதை தொகுப்பு அது. எழுத்தாளர் யாரென்று நினைவில்லை. அதில் ஒரு ஆண்டியைப்பற்றிய கதை. அவன் பாடும் பாடல் - 'நந்தவனத்தில் ஒர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி.. கொண்டுவந்தான் ஒரு தோண்டி.. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'. ('பிதாமகன்' ஏனோ நினைவுக்கு வருகிறது) சின்னவயதில் இருந்த அந்த கதைபடிக்கும் மோகம், சிலநாள் கல்கியின் நாவல்களில் திளைத்து, ஏனோ பெரியவனனானதும் கிரைம் நாவல் படிக்கும் பைத்தியமாக கொஞ்சநாள் மாறி, வாரமலர் லெவலுக்கு இறங்கி அப்புறம் போயே போய்விட்டது. இப்போதெல்லாம் எதாவது கதைப்புத்தகத்தை பார்த்தாலே வெறுமையைதான் உணர்கிறாய். எல்லாம் இந்த கம்ப்யூட்டர் செய்த மாயம். இயந்திரத்துக்கு கதை பிடிக்குமா?



பல வருடங்களுக்கு பிறகு அந்த வீட்டை சித்தி கல்யாணத்திற்காக உன் தாத்தா விற்கவேண்டிய நிலைமை ஆனதும் கொஞ்சம் வருத்தப்பட்டாய். அப்புறம் காஞ்சீபுரம் போனபோது ஒரு வாடகை வீட்டில் தங்கியது அவ்வளவாக ருசிக்கவில்லை. ஆனாலும் காஞ்சீபுரத்தில் இருந்த பிரமிக்கத்தக்க கோயில்களின் நினைவு பசுமை. பின்னர் தாத்தா அந்த ஊரைவிட்டு போனதும் உனக்கு அங்கே போகும் பாக்கியமே கிடைக்கவில்லை. சிங்காரச்சென்னையிலேயே சிங்கியடித்துவிட்டு இங்கு வந்து 'பே' ஏரியாவில் 'பே' என்று இருக்கிறாய். ஆனாலும் கோயிலை விடமுடியுமா? ஏதோ factory godown போன்ற இடத்தில் கோயில் என்கிறபோதும் சகித்துக்கொண்டு
வழிபட போகும்போது உணர்கிறாய்..வாழ்க்கை பாதையின் வியக்கத்தக்க மாற்றங்களை!

தொடரும்..

Monday, September 06, 2004

பழைய பதிவுகள் மீண்டெழுதலை தவிர்க்க..

என்னுடைய முந்தைய பதிவை வெளியிட்டதும் தமிழ்மணம் வாசகர் பக்கத்துல ஒண்ணுக்கு மூணா என்னோட பழைய ரெண்டு பதிவுகளும் கூடவே ஒட்டிக்கிட்டு வந்திருச்சு. இதைப்பத்தி பத்ரிகூட எழுதியிருந்தாரு. இந்த மாதிரி பழைய பதிவுகள் மறுபடி மறுபடி தோன்றுவது தமிழ்மணம் வலைவாசலுக்கு நல்லதல்ல. அதனால Blogger உபயோகிக்கற எல்லாரும் இதை தவிர்க்க ஆவன செய்யனும்னு கேட்டுக்கறேன் (உங்களுக்கு கிடைக்கற ஓசி காஜை விட்டுக்கொடுக்க சொல்றேன்னு யாரும் சண்டைக்கு வராதீங்க). என்ன ஆச்சுன்னா, Bloggerகாரங்க Post Pages ங்கற ஒரு புது விஷயத்தை புகுத்தியிருக்காங்க. அதனால வந்த வினைதான்னு சந்தேகப்படறாங்க. அதனால நான் கீழ சொல்லியிருக்கறமாதிரி விளையாடி பார்த்தேன். என்ன அதிசயமோ.. அடுத்தமுறை 15 நிமிஷங்களுக்கு அப்புறம் திரட்டப்பட்ட பதிவுகள்ள என்னோட புதிய பதிவு மட்டும் தோணிச்சு.


என் வலைப்பதிவோட Settings->Comments பக்கத்துக்கு போய் comments-ஜ hide செஞ்சுட்டு, Settings->Archiving பக்கத்துக்கு போய் Enable Post Pagesக்கு எதிரா Noன்னு சொன்னேன். (comments-ஜ hide செய்யலைன்னா இப்படி செய்யவிடாது). அப்புறம் திரும்ப Settings->Comments பக்கத்துக்கு போய் comments-ஐ Showன்னு மாத்தினேன். எதுக்கு இப்படி செய்யனும்கறது ஆண்டவனுக்கே வெளிச்சம்.


வலைப்பதிவுகளை வளர்க்கலாம் - காசி அவர்களுக்கு கடிதம்

வலைப்பதிவு முன்னேற்றக்கழக தலைவர் காசி அவர்களே,


உங்களுடைய இந்த வலைவாசலின் மூலமாக நாம் தமிழ் வலைப்பதிவு வரலாற்றின் ஒரு முக்கியமான கட்டத்திற்கு சென்றிருக்கிறோம். குறிப்பிட்ட சில வலைப்பதிவுகளை மட்டும் படித்துக்கொண்டிருந்த என்போன்ற பலர் வலைப்பதிவு சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களின் பதிவுகளையும் படிக்க ஆரம்பித்துள்ளோம். திசைகள் போன்ற வலை இதழ்களில் இதனைப்பற்றி எழுதியுள்ளதால் இன்னும் பலர் இந்த சமுதாயத்தில் இணைவார்கள் என நினைக்கிறேன். ஆனால், இன்னும் வலையில் ஆ.வி., குமுதம் மட்டும் படித்துக்கொண்டிருக்கும் பலரை எப்படி வலைப்பதிவுகளுக்கு இழுப்பது என்று நாம் யோசிக்கவேண்டும். காரணம், படிப்பவர்கள் எண்ணிக்கையைப்பொறுத்து தான் பல வலைப்பதிவுகளின் வாழ்நாள் அமையும். (தொடர்ந்து எழுதவேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட சிலரைப்பற்றி கவலையில்லை).


தமிழ் வலைப்பதிவுகளையும் இந்த வலைவாசலையும் பற்றி அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்தவேண்டும். ஆ.வி., குமுதம் போன்ற புகழ்பெற்ற இதழ்களை அணுகுவது அவ்வளவு சுலபமல்ல என்று நினைக்கிறேன். (அதுவும் நம் சுஜாதா தாத்தாவின் பொறுப்பில்லாத கமெண்ட்க்கு பிறகு). ஆனால், இங்கு அமெரிக்காவில் (எனக்கு தெரிந்தவரை நிச்சயமாக வளைகுடா பகுதியிலும் அட்லாண்டாவிலும்) தென்றல் என்ற ஒரு இலவச இதழ் மிகவும் பிரபலமானது. அதற்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பலாம், நிச்சயமாக வெளியிடுவார்கள். http://archives.aaraamthinai.com/thendral/index.asp என்ற சுட்டியில் இந்த இதழைப்பற்றி விவரங்கள் அறிந்துகொள்ளலாம். இந்தமாதிரி இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் ஏதேனும் ஒரு நல்ல இதழிற்கு கட்டுரை அனுப்பலாம்.


இந்த வருடம் டிசம்பரில் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சி குறித்தும் வருங்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தைப்பற்றியும் ஒரு கட்டுரை அனுப்பலாம். சிங்கப்பூரில் உள்ளவர் யாரேனும் இந்த கட்டுரையை மாநாட்டில் நேரில் வழங்கினால் நல்ல பயனளிக்கக்கூடிய வாய்ப்புண்டு. சுட்டி - http://www.infitt.org/ti2004/. மாலன் அவர்களும் இந்த நிகழ்ச்சி அழைப்புக்குழுவில் உறுப்பினராக இருக்கிறார் என்பதால் அவருக்கு இன்னும் விவரங்கள் தெரிந்திருக்கும்.


ஏதோ எனக்குத்தோன்றிய சில யோசனைகள். வலைப்பதிவு ஜாம்பவான்கள் இதை செயல்படுத்தினால் நம் வலைப்பதிவு உலகம் விரிந்துபரவ வாய்ப்புண்டு.


Wednesday, September 01, 2004

சினிமா பார்த்து அறிவை வளர்க்க..

நூலகம்னா என்னாங்க.. இல்ல தெரியாமத்தான் கேக்குறன்.. ஓ புரியலையா.. சரி தமிழ்லயே சொல்லிடறேன். லைப்ரரின்னா என்ன? நம்ம ஊருலல்லாம் லைப்ரரில புத்தகங்கள் இருக்கும். பார்த்திருக்கேன். இந்த ஊர்ல (அமெரிக்கா) என்னடான்னா எக்கச்சக்கமா வீடியோக்கள் வேற வெச்சிருக்காங்க. அதுவும் ஏதாவது டாக்குமெண்டரின்னா சரி ஒத்துக்கலாம். தூக்கம் வரலைன்னா எடுத்துப்பார்த்துட்டு பாதியில குரட்டை விடலாம். சினிமாப்படமெல்லாம் வெச்சிருக்காங்க! மொதல்ல பார்த்தப்போ எனக்கு புரியவேயில்லை. இந்த சினிமாவையெல்லாம் எடுத்துப்பார்த்துட்டு சனங்க என்னத்த அறிவை வளர்த்துக்கப்போறாங்க? இல்ல, இது லைப்ரரி பக்கம் மழைக்குக்கூட ஒதுங்காதவங்களையும் ஆசைகாட்டி இழுக்கறதுக்கா? உங்களுக்கு என்ன தோணுது?

இதுக்கும் மேல ஆச்சரியமா ஒரு மேட்டர் இருக்கு. எங்க Libraryல நிறைய தமிழ்ப்பட கேஸட், அட ஏன், DVD எல்லாம் வேற எடுத்துக்கலாம். ஒரே சமயத்துல பத்து வீடியோக்கள் வரை எடுக்கலாம். சில வீடியோக்கள் பாதியிலயே மக்கர் பண்ணினாலும் பொதுவா பார்த்தா நல்லாவே இருக்கு (தானம் கொடுத்த மாட்டை பல்லை புடிச்சு பார்க்காதேன்னு நீங்க சொல்றது எனக்கு புரியலை. சாரி).