Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Sunday, June 20, 2004

எழுத்தாளர் Syndrome

வரவர இந்த எழுத்தாளர்களெல்லாம் ஏன் இணையத்துக்கு வந்தார்கள் என்று ஆகிவிட்டது எனக்கு. பல ஆண்டுகளாக கணினி விற்பன்னர்கள் தமிழின் மேலுள்ள பற்றால் கணினியில் தமிழ் படிப்பதற்கான dynamic font போன்றவற்றை உருவாக்கி உபயோகித்து இன்றைய நிலைக்கு கொண்டுவந்தபின், இவர்கள் வருவார்கள்.. ஆளுக்கு நூறு குற்றம் கண்டுபிடிப்பார்கள். லிஸ்ட் லிஸ்ட்டாகப் போடுவார்கள்... நீங்ககூடவா திரு. ராமகிருஷ்ணன்? அவரின் லிஸ்ட் பற்றி என் கருத்துகள்....

1) பாதிக்கும் மேலாக எப்.எம்.ரேடியோ போல சகலதரப்புச் செய்திகளையும் எழுதித் தள்ளுகிறார்கள்

உங்களுக்குப் புரியவேயில்லையா? தமிழோவியம் ஆட்கள் சரியாக சொல்லித்தரவில்லையா? வலைப்பதிவு ஒருவரது அற்புதமான படைப்புக்களை உலகுக்கு வழங்க அல்ல. ஒரு தனிமனிதன் தன்னை பாதித்த, தோன்றிய எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுத. Blog is a frequent, chronological publication of personal thoughts and Web links.

2) நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு துளியும் சிரிப்புவரவிடாமல் எழுதும் கலையில் பலரும் விற்பன்னராகயிருக்கிறார்கள்.

நிறைய விஷயங்கள் புரிவதற்கு context தெரியவேண்டும் அய்யா. நீங்க ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்துட்டு....

3) ஊர்கதை. சினிமா. லேசான சமூககோபம், கொஞ்சம் அக்கறை அத்தோடு பெரும்பாலும் வெட்டி அரட்டை நிரம்பியிருக்கிறது

அய்யய்யோ.. இதென்னடா வம்பாப்போச்சு. உங்க சொத்தையா அழிக்கறோம். ஏதோ bloggerல இடம் கொடுக்கறாங்க. எழுதறோம். நாங்கல்லாம் சாதாரண மனிதர்கள் சாமி. எங்களுக்கு பல விஷயங்கள்ல ஆர்வம் உண்டு. உங்களை மாதிரி எழுத்தாளர் முத்திரையைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தேதிக்கு தமிழ் இணையத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அது பயனர்கள் ஒருவருக்கொருவர் கருத்து பறிமாற முடிவதால்தான். ஏன், அரட்டை அடித்தால் என்ன தப்பு? போனில் அரட்டை அடிக்கவில்லையா? இது புது மீடியம். அவ்வளவுதான்.

5) தமிழ் எழுத்தாளர்கள். வாசகர்கள் அனைவரது ஈமெயில் முகவரிகள் யாவையும் சேகரித்து ஒரு மெயில் ரைடக்டரி போடலாமே. (ஒருவேளை யாராவது செய்திருந்தால் அது எங்கே கிடைக்கிறது)

அப்படியெல்லாம் ஏதும் செய்யாமல் இருப்பதே நல்லது. எரிதர்கள் (spammers) கையில் அது கிடைத்தால் என்னவாகும் என்று நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

6)கச்சாமுச்சா என்று பலரும் எழுதும் கட்டுரைகளிலிருந்து சிறந்த சிலவற்றைத் தேர்வு செய்து அதை தனியாக ஒரு பைண்டிங் போல லிங்க் அமைத்து தந்தால் நன்றாகயிருக்குமல்லவா?

உங்கள் பத்திரிகை உலக வழக்கங்களை இங்கு கொண்டுவராதீர்கள். இப்படி ஒருவர் தேர்வு செய்து கொடுத்தால் அது அவரது விருப்புவெறுப்புகளை நிச்சயம் பிரதிபலிக்கும். அவருக்கு சினிமா அலர்ஜி என்றால் சினிமா பற்றிய வலைப்பதிவுகள் ஒதுக்கப்படும். ஒன்று மட்டும் நிச்சயம். இணையத்து தமிழர்கள் பாதிப்பேருக்கு இந்த பைண்டிங் பயன்படாது.

8) கோபத்தில் பயன்படுத்துவதற்கென்ன தனியாக கொஞ்சம் பழமொழிகள் மற்றும் மிதமான கெட்டவார்த்தைகள்,சொலவடைகள், அர்த்தமற்ற ஒலிகள் போன்றவற்றை எனது பக்கத்தில் சேகரித்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.. மின்எழுத்தில் ரொம்பவும் நாகரீகமான சொற்களால் கோபபடுகிறார்கள், அல்லது அப்படி நடிக்கிறார்களா?

Netiquette என்றால் என்னவென்று தெரியுமா? படித்து தெரிந்துகொள்ளுங்கள். நேராக கோபப்படும்போது தோன்றுவதைவிட இணையத்தில் கோபப்படும்போது மறைமுகமான அர்த்தங்கள் தோன்ற வாய்ப்புண்டு. அதனால் அடக்கிவாசிப்பதே மேல்.

9) மின்பக்கங்களில் யார். எப்போது என்ன எழுதுவார்கள் என்று தீர்மானமாகத் தெரியாமலேயிருக்கிறது.

இனிமேல் உங்களிடம் சொல்லிவிட்டு எழுதுகிறேன். இதே தொழிலாக இருந்தால் வலைப்பதிவுகளை வார இதழாக மாற்றும் அளவுக்கு எழுதலாம். இல்லையே..

10) தமிழ் ஆர்வம் மிதமிஞ்சியிருக்கிறது. தமிழைக் காப்பாற்றத் துடிக்கிறார்கள்.

இதைத்தான் முதலிலேயே சொன்னேன். மெனக்கெட்டு எழுதத்தெரியாவிட்டாலும் பொறுமையாக ஏன் எழுதுகிறோம் என்று நினைக்கிறீர்கள்?

"இந்த உலகத்தில். என்னையும் தங்களோடு சேர்த்துக்கொண்ட மின்எழுத்து சகாக்களுக்கு தீராத நன்றியும் வந்தனமும். "

நன்றியெல்லாம் எதுக்கு? யார் வேண்டுமானாலும் வரலாம். என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.

எனக்கு இவர்களது பிரச்சினை என்னவென்று தெரிகிறது. புதிதாக நுழைந்த களத்தில் ஏற்கனவே எக்கச்சக்கமான பேர் இருப்பதால் எழுத்துலகில் தங்களது உயர்வை சுட்டிக்காட்ட தோன்றுகிறது. தேவையேயில்லை. நீங்கள் எப்போதும்போல் நன்றாகவே எழுதுவீர்கள். உங்கள் எழுத்துக்கு நிறையபேர் வருவார்கள். ஆனால் இலக்கியத்தையும் கதைகளையும் தவிர தமிழுக்கு வேறு உபயோகங்களும் உண்டு என்று நம்புபவர்கள் வேறு உலகத்தில் இருக்கவே விரும்புவார்கள்.





இணையத்தொலைக்காட்சி!

"வாழ்க பென்டாசாப்ட்" என்ற வாழ்த்திக்கொண்டு இன்று நாங்கள் இணையத்தின்மூலம் வீட்டுத்தொலைக்காட்சியில் ராஜ் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இது மாதிரி ஒரு நிகழ்வுக்காக நான் எவ்வளவு நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? அந்த வரலாற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எனத்தோன்றியது. அமெரிக்கா வந்த புதிதில் சியாட்டலில் வேலைசெய்து கொண்டிருந்தபோது டிவியில் தமிழ் வராமல் கடியாகிப்போனேன். என்னதான் சிறப்பான ஆங்கிலத்திரைப்படங்களும் நிஜமாகவே சிரிக்கவைக்கும் Seinfeld போன்ற நல்ல நகைச்சுவை தொடர்களும் இருந்தபோதும் அதென்னவோ தமிழ் கேட்காவிடில் நம்மூர் டைப் சினிமா பார்க்காவிடில் ஒட்டவேமாட்டேனென்றது. அப்போதுதான் பென்டாமீடியாவின் நம் டிவி (http://www.numtv.com) என்ற இணைய முயற்சியைக் கண்டுபிடித்தேன். அப்போதெல்லாம் இத்துனூண்டு டப்பாவில் சில சேனல்களின் சில நிகழ்ச்சிகளை மட்டும் காட்டிக்கொண்டிருந்தனர். அதையும் விடாமல் வேலை நேரத்திலேயே சிலசமயம் பார்த்துக்கொண்டு (வீட்டில் PC இல்லை) இருந்தேன்.

அப்புறம் ஒரு கணினி வாங்கினேன். வாங்கும்போது நான் செய்த ஒரு புத்திசாலித்தனமான விஷயம் - Nvidia GeForce 3 with TV output வாங்கியது. கணினியை டிவிக்கு இணைத்து Games விளையாடலாம் என்ற ஆசையுடன் வாங்கியது அவ்வளவாக் workout ஆகவில்லை. காரணம், நான் அவ்வளவாக Games ப்ரியன் இல்லை. மேலும் கணினி என் படுக்கையறையிலும் என் ரூம்மேட்டின் டிவி லிவிங் ரூமிலும் இருந்தது. அப்போது DSL கனெக்க்ஷன் மட்டும் வாங்கி ஒருமுறை இணையத்தில் அமர்க்களம் படத்தைப் பார்த்ததோடு (அதுவும் மூன்றுமுறை நடுவில் நின்றுபோய்) என் experiment முடிந்தது. அந்த சமயத்தில் நம் டிவியிலும் சன், ராஜ் டிவி போன்ற பிரபல தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளை காட்டுவதை நிறுத்திவிட்டனர் (காப்பிரைட் பிரச்சினை என்று நினைத்துகொண்டேன்).

அப்புறம் தனியாளாக செலவுசெய்யவேண்டுமே என்று குறைந்த வாடகையுள்ள அபார்ட்மெண்டுக்கு மாறினேன். DSL எல்லாம் ஆஹா ஓஹோ என்று வரும் என்று சொன்னதை நம்பி ஏமாறி DSL சுத்தமாக வராமல் கடியானேன். ஒரு வருடத்துக்கு மேல் Dial-up லொள்ளை தாக்குப்பிடிக்கமுடியாமல் வாடகை கூட ஆனாலும் பிரபலமான வேறு communityக்கு மாறினேன். மாறும்போதே அபார்ட்மெண்டில் சில வசதிகள் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன். அப்போதுதான் சன்டிவி டிஷ் சாட்டிலைட் மூலம் அமெரிக்காவில் நுழைந்த நேரமாதலால் south facing patio இருக்குமாறும், கணினியையும் தொலைக்காட்சியையும் பக்கத்து பக்கத்தில் வைப்பதற்கு (s-video cable இணைக்கவேண்டுமே!) தேவையான அகலவாட்டமான living room இருக்குமாறும் பார்த்துக்கொண்டேன். சன் டிவி கொஞ்சநாள் வந்தது. ஆனால் winter போய் spring வந்ததும் தொலைவில் உள்ள மரங்களெல்லாம் நன்றாக வளர்ந்துவிட சன் டிவி அவுட். நானும் டிஷ்காரர்களுடன் போராடிவிட்டு சலித்துப்போய் விட்டுவிட்டேன்.

இன்று எப்படியோ நம் டிவி தளத்துக்கு சென்றபோது ராஜ் டிவியும் ஜெயா டிவியும் (சன் கிடையாது) மாதாமாத சந்தா கட்டி பார்க்கமுடிகிறது என்று கண்டுபிடித்தோம். உடனே எனக்குள் இருந்த பூதம் விழித்துக்கொள்ள demoவை முயற்சிசெய்துபார்த்தோம். முன்னைவிட பெரிய டப்பாவில் காட்டினார்கள். ஆனால் முழு திரைக்கு அகட்டியபோது கேவலமாக இருந்தது resolution. சரி பரவாயில்லை டிவிக்கு இணைத்துப்பார்க்கலாம் என்றால் s-video cable பஞ்சராகிக்கிடந்தது. என்ன அதிசயம், டிவியில் full screen செய்தபோதும் நன்றாகவே தெரிந்தது - nvidia cardன் மேஜிக்கா இல்லை சோனியின் அற்புதமா என்று தெரியவில்லை. அப்புறமென்ன $14 கொடுத்து ஒரு மாதத்துக்கு ராஜ் சேனல்களையும் மற்றும் சில இலவச சேனல்களையும் வாங்கியாயிற்று. சும்மா சொல்லக்கூடாது, ஒரு சின்ன தடைகூட இல்லை - கலக்குகிறார்கள் பென்டமீடியா!! அப்புறம், இணையத்தொலைக்காட்சிக்கு சோபாவில் ரிமோட்டாக முன்னர் வாங்கிய wireless keyboard and mouse உபயோகப்படுகிறது. எனக்கென்னவோ எல்லாவற்றையும்விட தமிழ் விளம்பரங்களும் அதில் வரும் விசித்திர தமிழும் பிடித்திருக்கிறது :)

Friday, June 18, 2004

ஜுன்ஜுன்வாலாவின் கம்பியில்லா தொழில்நுட்பம்

இன்று ஒரு வித்தியாசமான தொழில்நுட்ப வல்லுநரை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. IIT சென்னையில் பணிபுரியும் டாக்டர். அசோக் ஜுன்ஜுன்வாலா "கம்பியில்லா தொழில்நுட்பம் கொண்டு கிராமப்புற இந்தியாவை வளர்ப்பது" குறித்து இங்கு Palo Altoவில் பேசவந்திருந்தார். பேச்சின் சாராம்சத்தை இங்கு தருகிறேன்.

* 90களில் IIT சென்னை ப்ரொபசர்களால் ஆரம்பிக்கப்பட்ட TeNeT ஆராய்ச்சி குழு, துவக்கத்தில் இந்திய தொலைபேசி இணைப்புகளை 8 மில்லியனிலிருந்து 100 மில்லியனாக உயர்த்தும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. போகப்போக இது சாதாரண விஷயமல்ல என்று உணர்ந்தனர். பிரச்சினை - முதலீடு அதிகம், வருவாய் குறைவு. எனவேதான் கம்பியில்லா தொழில்நுட்பத்திற்குள் நுழைந்தனர். முதலீட்டை $1000லிருந்து இன்றைய தேதிக்கு $270 ஆக குறைத்துள்ளனர் (wireless local loop என்ற தொழில்நுட்பம் கொண்டு).
* இதேபோல் கிராமங்களில் Broadband, DSL இணைப்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளனர். குறைந்த தரமேயான காப்பர் கம்பியில் DSL செலுத்தி சாதனை புரிந்துள்ளனர். 20-30 நிறுவனங்களை கிராமங்களில் உபயோகப்படும் தொழில்நுட்பம் உருவாக்க ஊக்குவித்துள்ளனர்.
* TeNeTன் கனவுகளாக இவர் கூறுவது
- கம்பியில்லா தொழில்நுட்பம் மற்றும் இணையம் கொண்டு கிராமப்புற இந்தியாவை வளர்ப்பது.
- இந்தியாவை wireless போன்ற ஒருசில தொழில்நுட்பங்களிலாவது முதன்மையாக்குவது.
* இவர்களின் விடாப்பிடியான உந்துதலால் BSNL எல்லா தாலுக்காக்களுக்கும் Fibre connection என்ற உயர்தர இணைப்பைக் கொடுத்துள்ளது. சில கிராமங்களில் Kiosk என்ற நிலையத்தை அமைத்து அதில் எல்லா வசதிகளும் கொண்டு கணினி அமைத்து இணைய இணைப்பும் கொடுக்கிறது n-Logue என்ற நிறுவனம். கேபிள் டிவி போல லோக்கல் ஆபரேட்டர்களை ஊக்குவித்து அவர்களுக்கு Kiosk அமைத்துக்கொடுக்கப்படுகிறது.
* கணினியை கிராமங்களில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்ற இவரது புரிதல்கள் நம்பிக்கையளிக்கின்றன. என்னதான் உள்ளூர் மொழியில் வலைப்பக்கங்கள் அமைக்கமுயன்றாலும் அதெல்லாம் ஒன்றும் விளங்காது என்கிறார். மாறாக, வீடியோ கான்பரென்சிங் தான் நிறைய உபயோகிக்கப்படுகிறதாம்! எதற்கு? வெளியூரில் உள்ள தன் மகனுக்கு அம்மா 60 செகண்ட் வீடியோ அனுப்ப விரும்புகிறார். கிராமத்து ஒற்றை டாக்டர் வராதபோது, சென்னையில் உள்ள கண் டாக்டரிடம் அவசரத்துக்கு தன் கண் வீங்கலைக்காட்டி சிகிச்சை பெறுவது போன்ற முன்னே நினைத்துப்பார்க்க முடியாத விஷயங்கள்.
* இவரது கனவுகள்
- நகர்ப்புற இந்தியா வடக்கத்தி நாடுகளுக்கு IT சேவைகள் வழங்குவதுபோல் கிராமப்புற இந்தியா நகர்ப்புற இந்தியாவுக்கு சேவைகள் வழங்கமுடியுமா?
- இப்படி செய்வதன்மூலம் இந்தியாவின் தனிநபர் வருமானத்தை இருமடங்காக்க முடியுமா?
- 100லிருந்து 20000மாக Kioskகள் வளரமுடியுமா? அப்படிப்பட்ட நிலையை அடைந்தால் பெரிய நிறுவனங்கள் இந்த புரட்சியில் பங்குபெற முன்வருவார்களா?
- மூலைக்கு மூலை இருக்கும் STD/PCO போல் இந்த Kioskகள் பல்கிப்பெறுக எவ்வளவுநாள் பிடிக்கும்?

அர்த்தமுள்ள வகைகளில் இணையம் இந்தியாவுக்கு உதவ இதுபோன்ற முயற்சிகள் அவசியம் தேவை.

பி.கு. இப்படியெல்லாம் எழுதுவதால் என்னை அறுவை என்று முடிவு கட்டிவிடவேண்டாம் :) கூடியசீக்கிரம் 'அமுல்பேபி'யைப்போல் நானும் எல்கியவாதியாக ப்ளான் இருக்கிறது.


Saturday, June 12, 2004

மலையேறு கோபாலா!


ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்த ஒண்ணை இன்னிக்கு செஞ்சு முடிச்சாச்சு! மலையேறியாச்சு! அதாங்க, hiking!

எங்கடா மலையேர்றதுன்னு http://www.bahiker.comல தேடிப்பார்த்ததுல சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவை(Bay) மொதமொதல்ல கண்டுபிடிச்ச இடம்னு ஒரு எடத்த காமிச்சாங்க. மேற்கு அமெரிக்க கரையில ஒரு நல்ல துறைமுகத்தை தேடிட்டிருந்தப்ப Portolaங்கற ஷ்பானிஷ்காரர் Sweeney Ridgeங்கற இந்த மலைமேல ஏறித்தான் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடாவை கண்டுபிடிச்சாராம். அதுக்கான நினைவுச்சின்னம்தான் நீங்க மேல பாக்குறது.

காலங்காத்தால எட்டு(?) மணிக்கெல்லாம் எழுந்து வீட்டுக்காரம்மாவையும் எழுப்பிவிட்டு ரெடியாகி ஒரு வழியா 9 மணிக்கு கெளம்பினோம். எங்க வீட்டிலிருந்து 45 நிமிஷம் தேரோட்டி (car) இந்த மலைக்கு போய்சேர்ந்து நடக்க ஆரம்பிச்சோம். நல்ல தார்ரோடுதான். ரொம்ப steep இல்ல, அதனால ரொம்ப கஷ்டமா இல்ல. மொத தடவையே நொந்துபோனா அம்மணி அடுத்த தடவைக்கு ஒத்துக்கமாட்டாங்களோன்னு பயந்து கொஞ்சம் சாதாரணமாதான் தேர்ந்தெடுத்தேன். போற வழியெல்லாம் பலவிதமா பூக்கள் இருந்தது. பறிச்சுட்டே ஏறினாங்க மேடம்.



ஒரு மணிநேரம் நடந்து 560 அடி வரை ஏறி உச்சிக்கு போனதும் நல்ல View. ஒரு பக்கம் வளைகுடாவும் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலைய ரன்வேயும் அட்டகாசமாக காட்சியளித்தன. இன்னொருபக்கம் பசிபிக் மகாசமுத்திரமும் நீலவானும் எங்கு இணைகிறதென்றே தெரியாமல் ஒரு அற்புதம். ஒரு நல்ல இடத்தைப்பார்த்த சந்தோஷத்தோட உடம்புக்கும் ஒரு நல்ல பயிற்சி - 2-இன்-1. வீட்டுக்கு வந்து ஒய்வு எடுத்துட்டு எழுந்ததும், சூட்டோட சூடா இதை உங்களோட பகிர்ந்துக்கணும்னு தோணிச்சு. இந்தமாதிரி 2-இன்-1 ஸ்பாட்களை தேடிப்பிடிச்சு அடிக்கடி மலையேறனும்னு நினைச்சுட்டுருக்கேன்.