Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Monday, May 31, 2004

மெக்கின்ஸியும் இந்தியாவும் - 1

நிறைய பேரைப்போல் நானும் ஆந்திரா CEO சந்திரபாபு நாயுடு தேர்தலில் வெற்றிபெறாதது குறித்து அதிருப்தி அடைந்தவன்தான் (நம்ம இதயத்துக்கு நெருக்கமான ITக்கு நிறைய செஞ்சவராச்சே!). ஆனாலும் விவசாயிகளின் தற்கொலை பிரச்சினை தீர்க்கப்படாததும் உறுத்திக்கொண்டே இருந்தது. இன்று ஒரு கட்டுரையைப்படிக்க நேர்ந்தது. London Guardian பத்திரிகை கட்டுரையாளர் ஜார்ஜ் மான்பயாட் எழுதியது (Siliconeer இதழில் மறுபதிப்பு). அதில் அவர் நாயுடுவின் Vision 2020 ஆந்திராவை முன்னேற்றுவதற்கு மாறாக உருக்குலைத்திருக்கும் என்கிறார்.

அமெரிக்க நிறுவனமான மெக்கின்ஸி தயாரித்த இந்த ஆவணம் துவக்கத்தில் ஒன்றும், உள்ளே ஆழ்ந்து போகையில் மற்றொன்றும் சொல்வதாக இவர் குற்றம் சாட்டுகிறார். உதாரணத்துக்கு முதலில் கல்வியும் ஆரோக்கியமும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும், போகப்போக அரசு மருத்துவமனைகளும் பல்கலைக்கழகங்களும் தனியார்மயமாக்கப்படவேண்டும் என்று முரண்பாடாக உள்ளதாம். (Vision 2020ஐ நானே படித்துவிட்டு இது உண்மையா என்று கூறுகிறேன்). என்னைப்பொறுத்தவரை இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இவை இரண்டும் கண்டிப்பாக அரசாங்கத்தின் கையிலும் இருக்கவேண்டும். இல்லையேல் வறுமைக்கோட்டின்கீழ் உள்ளவர்கள் இவற்றை உபயோகிக்க வசதி இன்றி தவிக்க நேரிடும். மேலும் தொழில்துறை வளர 20 மில்லியன் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படவும் பரிந்துரைத்துள்ளதாம். ஏற்கனவே உணவின்றி தற்கொலை செய்துகொள்ளும் ஆந்திர விவசாயிகளின் நிலை என்னவாகும் என்று யோசியுங்கள். ஆனால், இலவச மின்சாரம் கொடுக்கவேண்டுமா கூடாதா என்பது பற்றி எனக்கு ஒரு தெளிவான நிலை இல்லை. உங்கள் கருத்து என்ன? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Vision 2020க்கு பிரிட்டன் நிதியுதவி அளிப்பது குறித்தும் இந்தக்கட்டுரை அதிருப்தி காட்டுகிறது. இது இந்தியாவில் பிரிட்டனின் வணிக முதலைகள் வலை விரிப்பதற்கான சூழ்ச்சி என்கிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதியுடன் Formula one raceஐ ஆந்திராவுக்கு கொண்டுவர நாயுடு முயற்சித்தது நினைவிருக்கலாம். ஆனால், ஆந்திர கேபினட் மீட்டிங் ஒன்றின் minutes வெளியே கசிந்ததில் தெரியவந்த ரகசியம் - Formula oneக்கு அரசாங்கம் 600 கோடி ரூபாய் மானியம் வழங்கவேண்டும் என்று மெக்கின்ஸி பரிந்துரைத்ததாம். இலவச மின்சாரத்தைவிட Formula one ஒன்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றவில்லை. மேலும் புகையிலை விளம்பரங்கள் மீதான தடையை Formula oneக்கு மட்டும் விலக்க முயற்சி நடந்ததாம். நல்லவேளை, இவையெல்லாம் அரங்கேறுவதற்குள் நாயுடுவை இறக்கிவிட்டார்கள் புத்திசாலி இந்தியர்கள் என்று முடிகிறது இந்தக்கட்டுரை. நாயுடுவுக்கு இதிலெல்லாம் என்ன பங்கு என்று சரியாக தெரியவில்லை - வெறும் பலியாடா இல்லை பூசாரியா??

(தொடரும்..)

Sunday, May 30, 2004

ஆய்த எழுத்தோடு புதிய விதி ஆரம்பிக்குமா?

தமிழ் சினிமாவில் அதிகம் காணமுடியாத யதார்த்தம், கருத்து சொல்லவேண்டுமென்ற மெனக்கெடல், மாதவன்+சூர்யா இணைந்த மிரட்டல் - ஆய்த எழுத்து.

மரத்தை சுத்திவந்து பாடி ஆடிய காலம்போய் வெளிநாடு போய் நடுரோட்டில அந்நாட்டு அம்மணியருடன் ஆட்டம்போட்டு மானத்தை வாங்கிக்கொண்டிருக்கும் காலத்தில், கதைப்போக்கோடு பாடல்களை ஓடவிட்டு திருப்தியளித்திருக்கிறார்கள். ஆனாலும் 'குருதிப்புனல்' மாதிரி மொத்தமா பாட்டே இல்லாம எடுக்கறதுக்கு மணிரத்னத்துக்கே தைரியம் வரல. அதனால முடிஞ்சவரைக்கும் எல்லாரையும் மனசுக்குள்ளயே பாடவெச்சுடறாரு. ஆனா ஹீரோ திடீர் திடீர்னு ஞாபகம் வந்து பாட்டுக்கு நடுவுல வர்ற ஹம்மிங்க மட்டும் எதோ பாகவதர் மாதிரி சாதகம் பண்ணறது நல்ல காமெடி. சீனெல்லாம் Original sound கேக்கறமாதிரி எடுத்திருக்கிறதுனால சிலசமயம் செவ்வாய்க்கிழமை டிவி டிராமா பாக்கற மாதிரி இருக்கு! ஆனா தியேட்டர்ல பக்கவாட்டுல பின்னாடியிருந்தெல்லாம் சத்தம் வர்றது நல்லாதான் இருக்கு. (நம்மூர் கொட்டாய்ல படத்த பாக்குறவங்க 'யோவ், கத்தாத'னு பக்கவாட்டுல இருக்கறவங்களோட சண்டைக்கு போகாம இருந்தா சரி :) ஒரே ஒரு மேட்டர்தான் ஒதைக்குது. US scholarship வாங்குற அளவுக்கு 'மண்டை' இருக்குற சூர்யா அடியாட்களையே பொடியாட்களாக்குற அளவுக்கு உடல்/மன பலத்தோடயும் இருக்கறது நடைமுறைக்கு எந்த அளவுக்கு ஒத்துவரும்னு தெரியல. தமிழ் சினிமாவில் அதிகம் காணமுடியாத யதார்த்தம் - ஆய்த எழுத்து.

'வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்காம அரசியல்ல பூந்து விளையாடுங்கடா தம்பிகளா' அப்டிங்கறாரு மணி சார். சூர்யாவும் சித்தார்த்தும் US போற சான்ஸை விட்டுட்டு நாட்டை திருத்தறதுக்கு வந்துடறாய்ங்க. வளமான கற்பனை. நிஜமாகவே நடந்தால் (பெத்தவங்களும் மத்தவங்களும் நடக்கவிட்டால்) நல்லாதான் இருக்கும். சூர்யாவுக்குத்தான் தன் அப்பாவின் போராட்ட உணர்வு ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்றால் முந்தாநாள்வரை 42.5 பொண்ணுங்களோடு குஜாலாயிருந்துவிட்டு US போக ரெடியாயிருக்கிற சித்தார்த் சில நாட்களில் அரசியலில் குதிப்பது நம்பமுடியவில்லை. அவர் சூர்யாவை பார்த்து inspire ஆகறதை இன்னும் கொஞ்சம் நம்பும்படியாக காட்டியிருக்கலாம். இப்படியிருக்க இந்த படத்தை பாத்து எத்தனை சித்தார்த்கள் உருவாவாங்கன்னு நெனைக்கறீங்க? மணி எப்பவும்போல் சொல்லவந்த கருத்தின் ஆழத்தை தொடாமல் மேலோட்டமாக தேவையற்ற மசாலா சேர்த்து கையாண்டிருப்பது குறையே. கருத்து சொல்லவேண்டுமென்ற மெனக்கெடல் - ஆய்த எழுத்து.

தியேட்டர்ல எத்தனை பொண்ணுங்க மணிரத்னத்தை சபிச்சிருப்பாங்களோ! பின்ன, அவங்க Dream Hero வை வில்லனா காட்னா எப்படி? கடைசி செகண்டு வரைக்கும் வீட்டுக்கதை பேசிட்டிருந்துட்டு அசால்ட்டா ஒரு கொலை செய்யற (செஞ்சிட்டு எதோ காதலிக்கு Propose பண்ணாமாதிரி சிரிக்கற) மாதவன். 'அலைபாயுதே'ல ஜொள்ளு வழியறதுக்கு உபயோகிச்ச சிரிப்பை கொஞ்சம் மாத்தி இதுல வில்லன் கொழுப்பை காமிக்கறதுக்கு உபயோகிச்சு அசத்தியிருக்காரு. ஆனாலும் சில இடங்கள்ல அவரோட மழலைத்தமிழ் தலைதூக்கி தாதா இமேஜுக்கு ஒத்துவரமாட்டேங்குது. மீரா ஜாஸ்மின் ஆம்பிளைங்களையெல்லாம் ஒரேமட்டா திட்டற அளவுக்கு பொண்டாட்டிய வெறுப்பேத்தறபோதும் சரி, கருவைக்கலைச்சிட்டேன்னு மீரா சொல்லும்போது 'கோபமும் இனி எதுவும் செய்யமுடியாதுங்கற இயலாமையும்' சேர்ந்து வெளிப்படுத்தறபோதும் சரி, மாதவன் இன்னும் ரவுண்டு வருவார்னு நிச்சயமா தெரியுது. மீசை இல்லாத, ஜோதிகா இல்லாத (அய்யோ பாவம்) சூர்யா. ஆனா நடிப்பில் எந்த குறையும் சொல்லமுடியாது. யப்பா, அவரது கண்கள் மட்டுமே தனியா பேசுது. நான் அப்பவே நினைச்சேன் - புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பாகிட்ட இருக்கற அதே அநாயாசம் minus over-expression. மாதவன்+சூர்யா இணைந்த மிரட்டல் - ஆய்த எழுத்து.

இதைத்தவிர சில அசத்தல், சில சொதப்பல். மீரா ஜாஸ்மின் மயக்கவைக்கறார். அவருக்கும் மாதவனுக்கும் இடையில் யதார்த்தமான 'இன்னிக்கு சண்டை, நாளைக்கு ரோமான்ஸ்' நல்லா அமைஞ்சிருக்கு. ஆனா அவரைவிட்டு பிரியர மாதவன் திரும்ப சேர்ராரா இல்லையான்னு காட்டாதது முற்றுப்புள்ளி வைக்காத வாக்கியம். மத்த ரெண்டு பேரோட காதல்லயும் ரொம்ப நல்லா தெரிஞ்சது - வெறுமை. நானே ஜோவை மிஸ் பண்ணேன்னா சூர்யா எவ்ளோ மிஸ் பண்ணியிருப்பாரு.. அந்தம்மா இஷா வேற நீட்ட முகத்தோட சும்மா குழந்தைத்தனமா எதோ செஞ்சு கடியேத்தறார். டப்பிங் வேற இல்லையா, டிவி compering தோத்துதுபோ! சித்தார்த் விளையாட்டுத்தனத்திற்கும் த்ரிஷா குளுமைக்கும் மட்டுமே. மௌனராகம் தந்த மணியா இது? இல்லை, உடல்நிலை சரியில்லாததால் கொஞ்சம் அடக்கி வாசித்துவிட்டாரா? சும்மா பஸ்ல கனவு கண்டுட்டு போறதையெல்லாம் எவ்ளோ நேரம் ரசிக்கமுடியும்? மத்தபடி சொல்லவேண்டியவர்கள்னா... அரசியல்வாதி பாரதிராஜா - அரசியல்லாம் நமக்கு சகஜமப்பா என்கிற அளவுக்கு குள்ளநரித்தனத்தையும் வில்லத்தனத்தையும் கலந்தளித்திருக்கிறார். மாதவனின் நண்பனாக வருகிற ஸ்ரீமனும் அவரது பெண்டாட்டியும் (யாரது?), கொஞ்ச நேரமே வந்தாலும் Natural. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பத்தியெல்லாம் எனக்கு அவ்ளோவா தெரியாததுனால ஷ்ஷ். இசைப்புயல் 'சண்டைக்கோழி'யில் குளுமையையும் 'ஜனகனமன'வில் வேகத்தையும் தந்திருக்கிறது. அதுசரி, 'சண்டைக்கோழி'யில் வரும் அந்த 'அய்யா..ஆ..ஆ'வுக்கு inspiration எந்த பிச்சைக்காரி? சுஜாதாவின் வசனம் பரவாயில்லை. எழுதிக்கொண்டிருந்தபோது அவர் டாய்லட் போகவேண்டியிருந்ததோ என்னவோ, வசனம் சில இடங்களில் நாறுகிறது. தமிழ் சினிமாவுக்கு இது தேவையில்லை.

படம் முடிந்து கிளம்பும்போது கேட்ட டயலாக் - 'இனிமேல்ட்டு அரசியல்தான் மச்சி'!! சும்மா சொல்றத்தேய்ன்ன்..

P.S: மணிரத்னத்தை ஆஹா ஓஹோ என்று புகழாமல் சாதாரணமாய் எழுதிட்டேன்னு சண்டைக்கு வராதீங்கோ சாமி.
P.P.S: படத்தை போலவே Pulp fiction இஷ்டைலில் இந்த விமர்சனத்தையும் எழுதியிருப்பதை நீங்க கவனிக்கலைன்னா, வெக்கத்த விட்டு நானே இங்க சொல்லிடறேன் :)