Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Saturday, September 27, 2003

யூனிகோட் தமிழின் வளர்ச்சி

இணையத்தில் தமிழ் பக்கத்தைப் பார்க்கப்போய் ஏதாவது விளங்காத எழுத்துக்களைப் பார்த்தவிட்டு சலிப்புடன் உலாவியில் இந்த எழுத்துரு (font) உபயோகித்து, அந்த குறியீட்டை உபயோகித்து... அப்பப்பா.. அதுவும் லினக்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.. இதற்கெல்லாம் நல்ல முடிவு வந்து கொண்டிருக்கிறது. ஆளாளுக்கு தன் பெயரில் ஒரு Dynamic எழுத்துருவை உருவாக்காமல், TSCIIயா TABஆ என்று சண்டை போடாமல் யூனிகோடுக்கு மாறினால் வருங்கால கணினிகளில் தமிழ் மிக சுலபமாக நுழைய வாய்ப்புள்ளது. கடந்த சில வாரங்களாக நான் உபயோகித்த சில செயலிகளைப்பற்றி சொல்கிறேன்.

முதலில் 'தமிழா' (http://www.thamizha.com) உலாவி. மோசிலாவின் தமிழாக்கம் - யூனிகோடில் எல்லா பட்டிகளும் (menus) தோன்றும். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவராக இருந்தால் மிக சுலபம். நிறுவியவுடன் வேலை செய்யும். ஏனென்றால், XPல் லதா என்ற யூனிகோட் எழுத்துரு இயல்பாகவே உள்ளது. விண்டோஸ் 2000 என்றால் Control panel->Regional options சென்று Indic system நிறுவினால் போதும்.

லினக்ஸிலும் யூனிகோட் வேகமாக நுழைந்து வருகிறது. முதலில் GNOME பயன்படுத்தும் GTK2விலும் இப்போது KDE பயன்படுத்தும் Qtயிலும் கூட சில இந்திய மொழிகளுக்கான (தமிழ் உட்பட) rendering வந்துவிட்டது. நீங்கள் GTK2 உள்ள Redhat 8.0 அல்லது Redhat 9.0 வைத்திருந்தால் ftp://ftp.mozilla.org/pub/firebird/nightly/latest-trunk/MozillaFirebird-i686-linux-gtk2+xft.tar.gz என்ற சுட்டியில் உள்ள மோசிலா உலாவியை நிறுவி யூனிகோட் பக்கங்களை காணலாம். என்னுடைய இந்த வலைப்பூவை லினக்ஸில் பார்க்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். இன்று பார்த்தபின்பு திருப்தியாக இருந்தது.

Sunday, September 14, 2003

கணினியுடன் மோத தயாரா?

http://www.20q.net என்ற இணையத்தளத்திற்கு சென்று அது கேட்கும் 20 கேள்விகளுக்கு பதிலளித்தால் நீங்கள் மனதில் நினைத்துள்ள பொருள் என்னவென்று கண்டுபிடித்துவிடும். 20ல் முடிக்கமுடியாவிட்டாலும் 30க்குள் கண்டுபிடிக்க முயலும். நான் நினைத்த ஒரு பொருளை 20க்குள்ளும் இன்னொன்றை 23வது கேள்வியிலும் கண்டுபிடித்துவிட்டது. எல்லாம் செயற்கை மூளையின் மகிமை. நியுரல்நெட் எனப்படும் தானாக கற்றுக்கொள்ளும் மென்கலன். இந்த தளத்தை டைம் சஞ்சிகை முதன்மையான 50 தளங்களுள் ஒன்றாக தேர்ந்துள்ளது.

Tuesday, September 09, 2003

ஸ்டார் வார்ஸ் பையன்

காற்றில் பறந்துபோன பலூனை பிடிக்கமுடியுமா? அதுபோலத்தான் இணையத்தில் நுழைந்த தனிமனித சொத்தும். கிஸ்லைன் ராசா எனும் பையன், ஸ்டார் வார்ஸ் ஜெடை (Jedi) ஒளிக்கற்றையை சுழற்றுவதுபோல் தான் கோல்ஃப் பந்து எடுக்கும் கம்பை சுழற்றுவதை விளையாட்டாக வீடியோ எடுத்து வைத்திருந்தான். இதை எப்படியோ தெரிந்துகொண்ட அவனது நண்பர்கள் சிலர் அந்த வீடியோவை இணையத்தில் ஏற்றிவிட்டனர். கிஸ்லைன் கொஞ்சம் குண்டாக இருப்பதாலும் அவன் கம்பை சுழற்றுவது வேடிக்கையாக இருந்ததாலும் இந்த வீடியோ படுவேகமாக இணையத்தில் பரவியது. பலர் இந்த வீடியோவை பல்வேறு விதமாக மாற்றி (நிஜமாக ஒளிக்கற்றையை சுழற்றுவதுபோல் எல்லாம்) இன்னும் இதை பிரபலப்படுத்தினர். http://www.jedimaster.net என்ற இணையத்தளத்தில் இவற்றையெல்லாம் சேகரித்து 92 விதமாக மாற்றப்பட்ட வீடியோக்கள் காணப்படுகின்றன. இந்த சாக்கில் டி-சர்ட் மற்றும் பல பொருட்களை இங்கு விற்றும் பணம் பண்ணுகின்றனர். இதற்கிடையில் இந்த பையன் வெறுத்துப்போய் பள்ளியை விட்டுவிட்டதாகவும் மனநல மருத்துவரை நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் வல்ல இணையமே, உன் சக்திக்கு ஈடு இணை இல்லை!

Sunday, September 07, 2003

மனதைத் தொடரும் மனிதர்கள்

'தில்லானா' - கலிஃபோர்னியாவில் தற்போது பிரபலமான தமிழ் மெல்லிசைக்குழு. இதுவரை பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இவற்றை ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்டு/கேட்டு களித்துள்ளனர். இரண்டு சிறப்பம்சங்கள் - இவர்களில் பலர் மென்பொருள் வல்லுநர்கள் (ஆனால் நல்ல இசைஞானம் மிக்கவர்கள்), தங்கள் நிகழ்ச்சிகளின் வருவாய் எல்லாவற்றையும் லாபத்துக்கல்லாத அமைப்புகளுக்கு (non-profit organisations) நன்கொடையாக அளித்துவிடுகின்றனர்!! யாருக்கிந்த மனசு வரும்? இவர்கள் நான் பங்கேற்கும் லாபத்துக்கல்லாத அமைப்புக்கும் ஒரு நிகழ்ச்சி செய்து கொடுத்தனர். எங்களுக்கு நன்கொடையாக இருபதாயிரம் டாலர் வரை ஈட்டித்தந்தனர். இதேபோல் இதுவரை நான்கு அமைப்புகள் (உதவும் கரங்கள் உட்பட) பயன்பெற்றுள்ளன. தங்கள் hobbyயை சமுதாயத்திற்கு பயனுள்ளதாக ஆக்கித்தரும் இவர்கள் நிச்சயம் என்னையும் உங்களையும் வியக்கவைப்பவர்கள் என்பது மிகையாகாது.

அடுத்தது, என் கல்லூரி சீனியர் TRV. இவன் ஒரு சகலகலாவல்லவன். படிப்பில் புலி, மிமிக்ரி செய்வான், மைக்கேல் ஜாக்சன் நடனம் ஆடுவான். USல் கணினி பொறியியல் செய்துவிட்டு இப்போது சன் டிவியில் 'அலைகள்' தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறான். என்ன உளறுகிறாய் என்கிறீர்களா? அக்மார்க் நிஜம். இதுமட்டுமல்ல. ஒரு திரைப்படப்பாடலுக்கு இசை வேறு அமைத்திருக்கிறான். முதன்முதலில் அவனை சன்டிவியில் பார்த்தபோது நான் அசந்துபோனேன். அவனா இவன்!! டாலர்களையும் அமெரிக்க வாழ்க்கையையும் விட்டுவிட்டு தன் கனவுகளை தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறான். சிலர் அவனை பைத்தியக்காரன் என்றுகூட சொல்லலாம். ஆனால், என்னைப்பொறுத்தவரை அவன் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். என் கவலை எல்லாம் அவன் பத்தோடு பதினொன்றாக ஆகாமல் தனிமுத்திரை பதிக்கும் நடிகனாகவோ, இசையமைப்பாளனாகவோ வரவேண்டும் என்பதுதான்!

மணி மைக்கேலானது எப்படி?

அழைப்பு மையங்கள் (call centers) - இதுதான் இந்தியாவின் அண்மைகால ரீங்காரவார்த்தை (buzzword). 19-21 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் சொர்க்கங்கள். ஆனால், இவற்றைப்பற்றி நான் படித்த ஒரு கட்டுரை என்னை சிந்திக்கவைத்தது.

இந்தப்பணியில் சேர இரண்டு தகுதிகள் தேவை - ஒன்று, ராத்திரியெல்லாம் விழித்திருந்து தொலைபேசியுடன் உறவாடவேண்டும் (அமெரிக்காவில் அது பகலாயிற்றே). இரண்டு, சரளமாக ஆங்கிலம் (அதுவும் அமெரிக்க வாடையுடன் இந்திய பயன்பாடு எதுவும் கலக்காமல்) பேசவேண்டும். இன்னுமொரு வேடிக்கை - தன்னை அமெரிக்கப்பெயருடன் அறிமுகப்படுத்திக் கொள்ளவேண்டும்!! இந்தியப்பெயர்களை அமெரிக்கர்கள் உச்சரிக்க கஷ்டப்படுவதைப் பார்த்தவர்கள் இது ஏனென்று புரிந்துகொள்வர். அதுவுமல்லாமல், உறுதுணை (support) வேலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதை அமெரிக்கர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. Slastdot என்ற இணையத்தளத்தில் இதைப்பற்றி காரசாரமான விவாதங்கள் நடக்கும்.

சரி, அவ்வளவுதானே என்கிறீர்களா? அதில்தான் பிரச்சனையாம். இவ்வேலையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக உள்ளதாம். பலர் மனநல மருத்துவர்களை நாடுகின்றனறாம். இவர்களின் இளம் வயதும், வாடிக்கையாளர்களின் எரிச்சல் நிரம்பிய மனப்பான்மையும், அசாதாரணமான உணவு மற்றும் உறக்கப் பழக்கவழக்கங்களும் இதற்கு காரணங்களாம். சிலர் split personality ஆகக்கூட நடந்துகொள்கின்றனராம். தன்னிச்சையாக இந்தியனாக இருப்பதா? இல்லை அமெரிக்க அவதாரம் எடுப்பதா? காலையில் ஒரு அவதாரம், இரவு மற்றொன்று. திரிசங்கு சொர்க்கம். பாவம் இளைஞர்கள். ம்ஹும்...

Friday, September 05, 2003

பாதித்தது: முழுகும் கிராமங்கள்

போன வருடம்போல் இந்த வருடமும் நர்மதா பள்ளத்தாக்கில் அடைமழையால் நீர் அளவு மிக அதிகமாகி ஆதிவாசிகளின் கிராமங்கள் முழுகிக்கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் மெத்தனப்போக்கால் இவர்கள் மாற்று நிலம் இல்லாமல் தவிக்கின்றனர். Drowned Out என்ற டாகுமென்டரி இந்த பிரசினையை அலசுகிறது. ଧஅணைகள்தான் நவீன இந்தியாவின் கோயில்கள்ଧ என்று படித்த நியாபகம் வருகிறதா? இந்த படத்தைப்பார்த்தால் உங்களுக்குள் வேறுவிதமான அபிப்பிராயங்கள் உருவாகும்.

Wednesday, September 03, 2003

படித்து ரசித்தது: விசித்திர ஏலம்

வணக்கம். இன்றுமுதல் சிலந்தியாகிய நான் வலை பின்னப்போகிறேன். என் வலையில் வந்து மாட்டுபவர்களை திருப்தி செய்ய முயற்சிப்பேன். இனி....

CD வடிவத்தில் உள்ள பாடல்களை ebay-ல் ஏலம் விடலாம். மின்னிசை வடிவத்தில் உள்ள இணையத்தில் வாங்கிய பாடலை ஏலம் விடலாமா? ஒருவர் விடத்துவங்கினார்.எங்கேயோ போய்விட்டது ebay என்கிறீர்களா? அவர் இதை ஓரு மின்னிசை சொத்துரிமை பற்றிய பரீட்சையாக நடத்துவதாகக் கூறுகிறார். ஆனால் அந்தோ! ebay தன்னுடைய பாலிசி ஒன்றை காரணம் காட்டி அந்த ஏலத்தை தடை செய்துவிட்டது. $0.99க்கு அவர் வாங்கிய அந்த பாடல் $15000க்கும் மேலாக bid செய்யப்பட்டது!! ஒரு குறும்பானவர் 99 மில்லியனுக்கு கூட bid செய்தாராம் ;-)