Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Thursday, July 06, 2006

கி.பி. 2106: மரணத்தை வெல்லும் மருந்து

(இது தேன்கூடு போட்டிக்கான ஒரு Science Fiction கதை. லாஜிக் எங்கேயாவது உதைத்தால் திருப்பி உதைத்துவிட்டு மேலே படியுங்கள் ;))

ஜான்சனால் ஆவலை அடக்கமுடியவில்லை. நிறைய நேரம் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று யோசித்ததில் தலை வலித்தது. பின்னே, மரணத்தை வெல்லும் மருந்து என்றால் சும்மாவா? ஜான்சன் உலகிலேயே தொழில்நுட்பத்தில் சிறந்த நாடொன்றின் 'வாழ்நாள் நீடிப்பு' ஆராய்ச்சி மையத்தின் தலைவர். சற்றே பருமனான தேகம். முன்வழுக்கை. பின்னாலேயும் நிறைய தலைமுடி என்று சொல்லமுடியாது. தன் எழுபதுகளிலும் சுறுசுறுப்புடன் மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியிருப்பவர்.

2080களிலேயே மனிதனுக்கு மரணத்தை உண்டாக்கும் கொடிய நோய்களுக்கெல்லாம் (எய்ட்ஸ் உட்பட) மருந்து கண்டுபிடித்தாயிற்று. அவரது ஆராய்ச்சி மையம் எய்ட்ஸூக்கான மருந்தை கண்டுபிடித்தபோது நாட்டின் அதிபரே நேரில் வந்து கைகுலுக்கினார். தன் மகிழ்ச்சியை அடக்கமுடியாமல் அதிபர் முகமெல்லாம் மலர்ந்தபோது இவருக்கு பெருமை பிடிபடவில்லை. அது மட்டுமா? எல்லா வாகனங்களும் 2070களில் தானியங்கியாக ஆகிவிட்டதால் விபத்துகள் நேர்வதும் முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிட்டது. சாலைகளில் ரோபோக்கள் போல கணினி உதவியுடன் வாகனங்கள் செல்லும்போது விபத்தாவது? மரணமாவது?

ஆனால், இந்த முதுமையால் ஏற்படும் மரணத்தை தான் எதுவும் செய்யமுடியவில்லை. அதிபர் ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது. 'எப்படியாவது முயன்று இதற்கு மருந்து கண்டுபிடித்தீர்களானால், அந்த மருந்தை நம் நாட்டின் தலைசிறந்த தொழில் நிபுணர்கள், அறிவியலாளர்கள் எல்லாருக்கும் வழங்கலாம். அத்தகைய சிறந்த மனிதர்கள் மரணிக்காமல் இருந்தால் நாட்டுக்கு எவ்வளவு நன்மை என்று யோசித்து பாருங்கள்'. ஆனால், ஜான்சனும் உலகிற்சிறந்த ஜீன் ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய அவரது குழுவும் எவ்வளவு முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. 'மரணத்தை வெல்லமுடியாது' என்ற முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டபோதுதான் அந்த செய்தி வந்தது.


வேற்று நாட்டு 'வாழ்நாள் நீடிப்பு' ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் 'வெய் வூ' தன்னை சந்திக்க விரும்புவதாக. வூ முதுமையைத் தவிர்க்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததால் ஏன் தன் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அதை தெரிவிக்கிறார் என்ற குழப்பம் வேறு. எல்லாம் இப்போது தெளிவாகிவிடும். முப்பரிமாண ஹோலோகிராம் ப்ரொஜக்டர் தயார் என்று உதவியாளர் தெரிவித்ததும் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தார் ஜான்சன். ஒரு பட்டனை தட்டியதும் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த வூவின் உருவம் சடாரென்று வெளிச்ச துகள்களாக கண்முன்னர் தோன்றியது. தலை மட்டும் இரண்டாக தெரிந்ததும் இந்த ப்ரொஜக்டரை முதலில் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டார் ஜான்சன். தாடையை சொறிந்து கொண்டிருந்த வூ முப்பரிமாண தொடர்பு கிடைத்ததை உணர்ந்ததும் விரைவாக கையை எடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார்.

'க்வா ஹூ மா ஜூங்' என்றார் வூ. ஒன்றும் புரியாமல் 'என்ன கொடுமை சார் இது' என்று முணுமுணுத்தார் ஜான்சன். தன் உதவியாளரிடம் 'அந்த UTஐ எடுத்து வாப்பா' என்றார் ஜான்சன். UT எனப்படும் Universal Translator ஒரு ஹெல்மெட் போல இருக்கும். எந்த மொழியிலிருந்து எந்த மொழி என்று செட் செய்துவிட்டு அதை தலையில் மாட்டிக்கொண்டால் மொழிமாற்றம் செய்யப்பட்டு காதில் கேட்கும். ஜான்சன் அதை மாட்டிக்கொண்டதும் வூவின் பாஷை புரிந்தது. தன் கண்டுபிடிப்பு எப்படி வேலை செய்யும் என்று விளக்க ஆரம்பித்தார் வூ. மனிதனின் மூளையிலிருந்து ஒரு திரவத்தை எடுத்து அதை என்னென்னவோ செய்து இந்த மருந்தை உருவாக்குவதை DNA செயின்களை கொண்டு விளக்கினார். இந்த மருந்தை ஐந்து பேருக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடுத்ததாகவும், அவர்கள் எல்லாரும் அப்போது எந்த உடல்நிலையில் இருந்தார்களோ இப்போதும் அப்படியே இருப்பதாக (அதாவது எந்த உடல் உறுப்பும் பழுதாகாமல்) கண்கள் விரியக்கூறினார் வூ. அவரது விளக்கத்திலிருந்தே அவர் கூறுவது உண்மைதான் என்று உணர்ந்துவிட்ட ஜான்சன், 'வூ, நீங்கள் இதை உங்கள் நாட்டுக்கு தெரிவித்தீர்களா?' என்று கேட்டார்.


வூ சட்டென 'அதை ஏன் கேட்கிறீர்கள்? எல்லாம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டு சந்தேகப்படுகிறார்கள். என் நாட்டில் எதுவும் வேலைக்காகாது. அதனால் நீங்கள் ஒரு நல்ல தொகையை கொடுத்து என்னை உங்கள் நாட்டு குடிமகனாகவும் ஆக்கிக்கொண்டால், இந்த மருந்தை உங்கள் நாட்டுக்கு விற்றுவிட தயாராக இருக்கிறேன்' என்றார். ஓ.. அப்படி போகிறதா கதை என்று புன்னகைத்தார் ஜான்சன். அவருக்கு உடனே கற்பனை வருங்காலத்தை நோக்கி பறந்தது. வூவை தன் குழுவில் எப்படியாவது சேர்த்துவிட்டால் இந்த மகத்தான செய்தியை அதிபருக்கு தெரிவித்து அவரின் ஏகோபித்த பாராட்டுகளை பெறலாம். 'மரணத்தை வென்ற மாபெரும் அறிஞன்' என்று தன் பெயர் வரலாற்றில் ப்ளாடினம் எழுத்துக்களால் பொறிக்கப்படும். உணர்ச்சிவேகத்தில் காதெல்லாம் ஜிவ்வென்று சிவந்தது. ஆனால், ஏதோ ஒன்று நிரடுவதாக உணர்ந்தார்.

தன் குழுவே அந்த மூளை திரவத்தை வைத்து ஐந்தாண்டுக்கு முன்பு ஆராய்ச்சி செய்ததே.. அப்போது இது சாத்தியமில்லை என்றுதானே விட்டுவிட்டோம். ஆராய்ச்சியில் ஏதாவது தவறு நடந்ததா? சரி, கேட்டுவிடுவோம் என்று முடிவுசெய்து 'வூ, நாங்களும் இதே திரவத்தை இறந்து போனவர்களின் மூளையில் இருந்து எடுத்து முயற்சி செய்தோமே.. எப்படி உங்களுக்கு மட்டும் வேலை செய்கிறது?' என்றார். அதற்கு வூ சொன்ன பதிலில் நாள்பூராவும் இருந்த ஆவல் எல்லாம் அவலாய்ப்போனது. மரணத்தை வெல்வது அவ்வளவு சுலபமல்ல என்பது மறுபடியும் புலனானது. கற்பனைக்கோட்டை எல்லாம் சிதற சலிப்புடன் எழுந்தார் ஜான்சன். வூ சொன்ன பதில் இதுதான்.


'அங்கேதான் ஜான்சன் ஒரு கேட்ச். இறந்தவரின் மூளையிலிருந்து திரவத்தை எடுத்து அவர் இறந்த ஒரு மணி நேரத்துக்குள் மருந்து தயாரித்து உயிர் வாழ்பவருக்கு கொடுத்துவிடவேண்டும். இதில் சேமித்து வைப்பது எல்லாம் நடக்காது. அதாவது, ஒருவர் மரணத்தை வெல்ல இன்னொருவர் மரணத்தை தழுவவேண்டும். ஹி.. ஹி..'


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home